பல தடைகளையும், படிக்கற்களாக மாற்றி இருக்கும் Thyrocare நிறுவனத்தின் தலைவர் வேலுமணி அவர்கள்.

கோவை அருகே அன்றைய நிலையில் மின்சார வசதியும், பேருந்து வசதியும் இல்லாத சின்னஞ் சிறிய கிராமமான அப்பநாயக்கம்பட்டி புதூரில் நிலமில்லா விவசாயிக்கு மகனாக பிறந்தவர், Thyrocar நிறுவனத்தை தொடங்கிய டாக்டர்.வேலுமணி அவர்கள்.



Thyrocare நிறுவனம் நோய் தடுப்பு மற்றும் சுகாதார சோதனை ஆய்வகங்களை (diagnostic and preventive care laboratories) கொண்டுள்ளது. முக்கியமாக தைராய்டு சோதனைகள், மனித இரத்த மாதிரிகள் சோதனை உள்ளிட்ட 200 மேற்பட்ட சோதனைகளை செய்கிறது. இந்தியா மட்டுமல்லாது நேபால், பங்களாதேஷ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 1,150 க்கும் மேற்பட்ட மையங்கள் கொண்டுள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 3700 கோடி ரூபாய்.



வேலுமணி அவர்கள் படித்தது தமிழ் வழி கல்வியில்தான். 1978 இல் பட்டம் பெற்ற பின்னர் போதிய பணி அனுபவமும், ஆங்கில பயிற்சியும் இல்லாத காரணத்தால் பல நிறுவன நேர்காணல்களில் இவர் நிராகரிக்கப்பட்டார். இறுதியாக மாத்திரை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் மாதம் ரூ.150 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். அந்த நிறுவனமும் 3 ஆண்டுகளில் மூடப்படவே ரூ.82 இரயில் டிக்கெட்டுடன் கையில் 400 ரூபாய் பணத்துடன் மும்பைக்கு சென்ற அவர் 3 நாட்கள் தங்கியது மும்பை ரயில் நிலையத்தில்.
பின்னர் மும்பையிலுள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ஆய்வக உதவியாளர் பதவிக்கு வேலை கிடைத்தது. அங்கு பணி புரிந்து கொண்டே முதுகலை பட்டத்தையும், டாக்டர் பட்டத்தையும் முடித்தார்.
அரசு வேலை, கைநிறைய சம்பளம், வசதியான வாழ்க்கை என அனைத்தும் இருந்தாலும் வாழ்க்கையில் எதையாவது பெரியதாக சாதிக்க வேண்டும் என்ற வெறி மட்டும் இவரிடம் இருந்துகொண்டே இருந்தது. 14 ஆண்டுகள் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை பார்த்த இவர் தனது வேலை விட்டு தனக்கு கிடைத்த ரூ.2 இலட்சம் வருங்கால வைப்பு நிதியை கொண்டு 1995 ல் Thyrocare நிறுவனத்தை தொடங்கினார்.



அவர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன் யாரிடமும் ராஜினாமா செய்ய போவதாக கூறவில்லை, வேலையை விட்ட பிறகே அவர் மனைவியிடம் கூறினார். இதற்கு அவர் கூறும் விளக்கம்
நாம் விவாதித்து கொண்டிருந்தால் முடிவுகளை எடுக்க யோசிப்பதற்கான ஆயிரம் காரணங்கள் எழும். வேலையை விட்டுவிடலாமா என என் மனைவியிடம் கேட்டிருந்தால் நிச்சயம் அவர் வேண்டாம் என்றுதான் கூறியிருப்பார், பிறகு என் சொந்தம் எல்லோரும் இந்த முடிவை எதிர்த்திருப்பார்கள். Discuss or Decide விவாதித்து கொண்டிருந்தால் எந்த முடிவையும் எடுக்க முடியாது.

இது மட்டுமல்ல அவர் மும்பைக்கு கிளம்பும் முன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, இரயில் டிக்கெட்டை பதிவு செய்த பிறகுதான் அவர் அப்பாவிடம் மும்பைக்கு போவதாக கூறினார்.
1882 ல் கோவையிலிருந்து மும்பைக்கு கையில் கொஞ்சம் பணத்துடன், தமிழ் தவிர வேறு எந்த மொழியும் தெரியாமல் சென்ற அவர் அடிக்கடி கூறுவது நான் கோவையிலிருந்து மும்பைக்கு வந்தபோது கையில் எதுவும் இல்லாமல் மனதில் உறுதியை மட்டுமே கொண்டு வந்தேன் என்று குறிப்பிடுகிறார்.
திரு.வேலுமணி அவர்கள் படித்து முடித்தவுடன் போதிய பணி அனுபவம் இல்லை என்று கூறி பல நிறுவனங்களும் இவருக்கு வேலைத்தர மறுத்ததால், இன்று இவரது நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 98% பேர் முன் அனுபவம் இல்லாதவர்கள்.
ஏழ்மையும், எளிமையும் இவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது என்பதை அடிக்கடி குறிப்பிடுவார். இன்று இந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறேன் என்றால் எனது ஏழ்மையும், எளிமையும்தான் காரணம் என்பதை எல்லா மேடைகளிலும், பேட்டிகளிலும் தவறாமல் குறிப்பிடுவார் வேலுமணி.

யாராவது நான் கிராமத்தில் பிறந்துவிட்டேன், மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் என்று வருத்தப்பட வேண்டாம். இது உங்கள் பலவீனம் அல்ல, உங்களின் பலம். பிரச்சனைகளுக்கான சரியான தீர்வுகள் உங்களால்தான் கொடுக்க முடியும். ஹார்ட்வர்ட் பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொள்ள முடியாததை கிராமத்திலிருந்து கற்றுக் கொள்ளலாம் என்று கூறுகிறார் வேலுமணி.

வேலுமணி அவர்கள் தொழில் தொடங்கியபோது நிறுவனம் என்றால் என்ன, தொழில் என்றால் என்னவென்றே தெரியாது, நுழைந்த பிறகுதான் பலவற்றை கற்றுக்கொண்டார். அவர் போட்டியாளர்களை விட குறைந்த விலையில் தைராய்டு சோதனைகளை செய்தார். விலையை குறைத்து நிர்ணயித்தாலும் நிதி கட்டுப்பாடுகளை மிகவும் சிறந்த முறையில் நிர்வகித்தார்.  இதுவும் தைரோ கேர் நிறுவன வெற்றிக்கு ஒரு காரணம்.
தைராய்டு, வளர்ச்சிதை மாற்றம் (Metabolism), நாளமில்லா சுரப்பி (endocrine) சோதனைகள் போன்ற குறிப்பிட்ட துறையில் அதிக கவனத்தை செலுத்தினார். பலவற்றில் உங்கள் கவனத்தை செலுத்தினால் வெற்றிவாய்ப்பு குறைந்துவிடும், நீங்கள் குறிப்பிட்ட விஷயத்தில் கவனத்தை குவித்தால் வெற்றியடைவீர்கள் என்று கூறுகிறார் திரு.வேலுமணி.
நீங்கள் தொழிலில் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். ஒன்று இலாபத்திற்காக வேலை செய்வது, மற்றொன்று நிறுவனத்தின் மதிப்பை உயர்த்துவதற்காக வேலை செய்வது. நீங்கள் லாபத்திற்காக உழைத்தீர்கள் என்றால் வெறும் இலாபத்தை மட்டும் ஈட்டலாம். நிறுவனத்தின் மதிப்பை உயர்த்த உழைத்தீர்கள் என்றால், நிறுவனத்தின் மதிப்பும் உயரும், இலாபமும் அதிகரிக்கும். நான் இதில் இரண்டாவதை தேர்ந்தெடுத்தேன் என்று கூறுகிறார் டாக்டர்.வேலுமணி.

யார் வெற்றிப் பெறுகிறார்களோ  அவர்கள் தோல்வியும் அடைவார்கள், யார் பிறரை வெற்றிப் பெறச்செய்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் தோல்வியடையமாட்டார்கள். உங்கள் வாடிக்கையாளர்களை, விநியோகஸ்தரை, ஊழியர்களை, முதலீட்டாளர்களை, நுகர்வோரை உங்களை சுற்றி உள்ளவர்களை வெற்றி அடைய செய்யுங்கள் இது வேலுமணி கூறும் வெற்றிபெறுவதற்கான விளக்கம்.

1978-79 ஆண்டுகளில் 150 ரூபாய் சம்பளத்துடன் தொடங்கிய திரு.வேலுமணி அவர்களின் வாழ்க்கை இன்று 3700 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு நிறுவனத்தை உருவாக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது.

பல தடைகளையும், படிக்கற்களாக மாற்றி இருக்கும் Thyrocare நிறுவனத்தின் தலைவர் வேலுமணி அவர்கள், வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் பல இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை விதைகளை விதைத்துக் கொண்டே இருக்கிறார்.

நன்றி : tamilentrepreneur.com