உன்னைத் தவிர வேறு எவனாலும் உன்னை மாற்ற முடியாது.

ரசிகவ் ஞானியாரின் எத்துனை
அற்புதமான வார்த்தைகள்:

மாற்றம் ஒன்றே மாறாதது. நீங்கள்தான் எல்லாமும் என்று நினைத்துக் கொண்டிருக்காதீர்கள், எவரையும் எந்த நிலையில் இருந்தும் மாற்றலாம். மாற்றப்படவே முடியாத சக்தி என்று எதுவுமில்லை.


நிறுவனத்திலிருந்தோ வாழ்க்கையிலிருந்தோ உங்களை அப்படியே மாற்றிவிடலாம். மாற்றவே முடியாதவர் என்று எவரும் இல்லை. 

15 வருடங்களாக ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த  அலுவலக நண்பர் இறந்துவிட்டார். ஒரு நிறுவனத்தில் இருந்து விலக வேண்டுமானால், அவருடைய பணிகளைப் பற்றி புதிதாக வருபவர்களுக்கு விளக்க வேண்டும், புதிதாய் வருபவர்களுக்கு 2 மாதங்கள் KT ( Knowledge Transfer) கொடுக்க வேண்டும். இப்படி ஏகப்பட்ட  கட்டுப்பாடுகள் உண்டு.

ஆனால் இறந்த அந்த நண்பர் ஒருநாள் சட்டென்று மறைந்துவிட்டாலும் , நிறுவனம்  பணிகளில் தொய்வின்றி கடந்து கொண்டுதானிருக்கிறது , புதிய ஆட்களை  மாற்றிக்கொண்டு.

கதாநாயகர்களை விட அதிகமாக சம்பளம் வாங்கிக்கொண்டு கவுண்டமணி-செந்தில் இல்லாமல் படமே இல்லை என்கிற அளவுக்கு இருந்தவர்களையெல்லாம், காலம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டு, அடுத்தடுத்த ஆட்களை மாற்றிக்கொண்டு இன்னமும் வேகமாகத்தான் சினிமாத்துறை சென்று கொண்டிருக்கிறது.

என்னை விட்டால் ஆளில்லை என்கிற அளவுக்கு காமெடியில்  கொடிகட்டிப் பறந்த நடிகர் வடிவேலுவே இப்போது வானம் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

தன்னடக்கத்தை - பொறுமையை தரும் முதிர்ச்சி நல்ல அனுபவத்தில் இருந்து வருகிறது , ஆனால் சிலருக்கு அந்த முதிர்ச்சியே திமிராக மாறிவிடுகிறது. திறமை - அழகு - பணம்  இப்படி  வெவ்வேறு காரணிகளில் , மற்றவர்களை விட தாமே உயர்ந்தவர்கள் என்று நினைப்பவர்களை, காலம் அந்த காரணிகளைக் கொண்டே அழித்துவிடும்.

ஒரு இயற்கைப் பேரிடர் உங்களை அப்படியே புரட்டிப் போட்டுவிடும்.

இடுக்கி மலையின் உச்சியில் மஞ்சிக்கவலா என்கிற பள்ளி முகாமில் தஞ்சம் புகுந்திருந்த மக்கள் கூட்டங்களுக்கு நிவாரணம் வழங்கிக் கொண்டிருந்தபோது, நன்றாக ஆடையணிந்த ஒருவர் வந்து தயங்கி தயங்கி "ஒரே ஒரு பிஸ்கெட் பாக்கெட் கிடைக்குமா ?" எனக்கேட்டார்.

அவரைப் பார்த்தால் இரந்து வாழ்பவர் போல தெரியவில்லை, ஆனால் அன்று அந்த நாளில் அந்த மனிதர் இறந்து வாழ்ந்தார். :(  

ஒரு பெரும் மழை அவருடைய அத்தனை வருட வாழ்க்கையை மாற்றிப் போட்டுவிட்டது. 

இளையராஜா பாடலை கேட்டுக்கொண்டு, நீங்கள் காப்பி குடித்துக் கொண்டிருக்கும் அதே போல ஒரு பெரு மழைதான், அவரை வீட்டை விட்டே துரத்தி வீதிக்கு வர வைத்திருக்கிறது.

எதுவும் எவருக்கும் நிரந்தரமே அல்ல. இப்பொழுது பணம் கைகளில் நிறைய புழங்கும் ஆனால் சட்டென்று அது நின்றுவிடும்,  

ஆனால் அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல், காலத்தின் மீது ஏறி நின்று கொண்டு  , அதனை கயிறு கொண்டு பின்நோக்கி இழுக்க நினைத்து தோற்றுப் போனவர்கள் பலர். 

பணம் புகழ் இருக்கும்போது ஆடிவிட்டு, அதுவெல்லாம் கைமாறிப்போன பிறகும் கூட , அது தனக்கு இருக்கிறது என்று நம்பிக்கொண்டு இருக்கும் நடிகர்கள் நடிகைகள் அழிந்த கதையெல்லாம் பார்த்திருப்பீர்கள்.

உங்கள் வாழ்க்கையிலேயே நீங்கள் சந்தித்திருப்பீர்கள், ஆணவத்தால் அழிந்தவர்கள் - மாற்றத்திற்கு ஏற்ப மாற மறுப்பவர்களை , எப்படி காலம் புரட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை?

மாற்றங்கள் நிகழும்போது நிகழ்கின்ற அவமானங்கள் - வலிகள் - தோல்விகள் எல்லாம் ஏற்றுக்கொண்டு கடந்து போக வேண்டும், அதனுடன் மல்லுக்கட்டிக்கொண்டு இருந்தால், அது உங்கள் வாழ்க்கையின் நினைவுகளில் துக்கமாகத்தான் பதிவு செய்யப்படும்.

கண்ணதாசன் அவர்கள் "கவலை இல்லாத மனிதன்" என்கிற படத்தை எடுத்தார். அது அவரும் பெரும் கவலைகளை  கொண்டு வந்தது.  பெரும் நஷ்டமாகி, கடனுக்குள் தள்ளப்பட்டார். 

அவர் நிறுவனத்திடம் இருந்த 10 கார்களை அப்படி அப்படியே கடன்காரர்களிடம் கொடுத்துவிட்டு, அந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டு பழைய நிலைக்கு வந்து வாழ்ந்து கொண்டார்.

இன்னமும் அந்த கார்களிலேயேதான், பயணம் செல்ல வேண்டுமென நினைத்திருந்தால், கவிதைகளுக்குப் பதிலாக , அவருடைய வாழ்க்கையின் கறுப்படித்த பக்கங்கள்தான், இப்பொழுது நினைவுகளாகி இருக்க கூடும்.

ஒரு முனைப்புடன் பயணிக்கிறோம், அந்த முயற்சி ஏமாற்றமளிக்கிறது அல்லது நாம் விரும்பது போல நடக்கவில்லை எனில் ஏற்றுக் கொள்ளுதல் என்கிற நிலைக்கு வருவது சிறப்பு . 

அதனை விட்டு விட்டு அதற்கு எதிர்வினை ஆற்றினால்,
 எல்லா வினைகளும் நமக்கு எதிராகவே இருக்கும்.

"ஏண்டா பிறந்தோம்?" என்று பெரும்பாலானோர் சலித்துக் கொள்வதுண்டு - நீங்கள் விரும்பி பிறக்கவில்லை அதனை நீங்கள் மாற்ற முடியாது, ஏற்றுக்கொண்டுதான் பயணிக்க வேண்டும், அதுபோலவே நம்மைச் சுற்றி நிகழ்பவைகளும் .

ஒரு மழையைப் போன்று சட்டென்று ஒரு மரணம் வந்து போனால் கூட , எப்படி அந்த குடும்பம் - அந்த நிறுவனம் - அந்த நட்புகள் - அந்த சுற்றங்கள் எல்லாம் வழக்கம்போல சுழலுகின்றதோ? அது போலவே காலம் தன்னை சுழற்றும்.

கழட்டிவிட்டு புதுப்பித்துக் கொள்ளும் சக்தி காலத்திற்கு உண்டு, காலம் ஒரு பாம்புச் சட்டை போலத்தான், தேக்கி வைத்துக் கொள்ளாமல், எல்லாவற்றையும் தூக்கி எறிந்து கொண்டு , அதன் போக்கில் பயணப்பட்டுக் கொண்டே இருக்கும்.

கண்ணதாசன் குறிப்பிட்டிருப்பார் :

"கோடையில் குளம் வற்றிவிட்டதே என்று கொக்கு கவலைப்படக் கூடாது,
மீண்டும் மழை காலம் வருகிறது.

மழைக்காலம் வந்துவிட்டதென்று நதி குதிக்கக் கூடாது,
அதோ வெயில்காலம் வந்து கொண்டிருக்கிறது"

வேறு எவரும் உன் வாழ்க்கையை வந்து மாற்றிக் கொண்டிருக்க முடியாது.  மாற்றத்தை ஏற்படுத்துவதும் , மாற்றத்தை ஏற்றுக் கொள்வதும்,  மாற்றமாகவே மாறிவிடுவதும் நீதான்.

உன்னைத் தவிர வேறு எவனாலும் உன்னை மாற்ற முடியாது. 

மாற்றத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். ஐஸ்வர்யா ராயே ஆண்டியாகிவிட்டார்..  :)

நன்றி:- #ரசிகவ்_ஞானியார்