இதன் பெயர் 'ACANTHOSIS NIGRICANS'

இன்சுலின் எதிர்ப்புத்தன்மை
--------------------------------------------------
அரவிந்த ராஜ் 

இன்று நாம் பார்க்கப்போகும் தலைப்பு கீழுள்ள புகைப்படத்தை பற்றியே !!

இதை பார்த்ததும் 'அட... இது எனக்கு இருக்கே, எனக்கு தெரிஞ்ச நண்பருக்கு இருக்கே' என உங்களில் பலர் நினைக்கலாம்.

இதன் பெயர் 'ACANTHOSIS NIGRICANS'

பின்னங்கழுத்து, கழுத்தின் ஓரங்களில் கருப்பாக தட்டையாக இருக்கும் இதை சரிசெய்ய தமிழர்கள் தொன்றுதொட்டே கடலைமாவு, முல்தானி மட்டி போன்றவற்றை தடுவுவதை கண்கூட பார்த்திருக்கிறோம்.

ஆனால், அது நிரந்தரமாய் மறைந்துவிட்டதா எனக் கேட்டால் பதில் 'ஹூம்ஹூம்' என்பதே. ஏன் மறையவில்லை ?? இதை படித்து முடிக்கையில் உங்களுக்கே புரியும்.

இந்த ACANTHOSIS NIGRICANS ஏற்பட மிகமுக்கிய காரணம் 'Insulin Resistance' (இன்சுலின் எதிர்ப்புத்தன்மை)

Insulin Resistance என்றால் என்னவென நான் கூறுவதற்கு முன்பாக இன்சுலின் என்றால் என்ன? அதன் பணி என்ன? என்பதை கூறுகிறேன்.

நமது மனித உடல் பல்வேறு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. அதில் 'கணையம்' என்னும் பகுதி உற்பத்தி செய்யும் மிகமுக்கிய ஹார்மோன் இந்த 'இன்சுலின்'.

இன்சுலின் நமது நண்பன். அதன் பணி என்னவென்றால், எப்போதெல்லாம் நம் உண்ணும் உணவு செரிமானமாகி ரத்தத்தில்  சர்க்கரை அளவை கூட்டுகிறதோ, அப்போது இன்சுலின் சுரக்கும். சுரந்த இன்சுலின் ரத்தத்தில் அதிக அளவில் உள்ள சர்க்கரையை குறைக்க நமது உடலில் உள்ள செல்களுக்கு உள்ளே அவற்றை சேமித்துக்கொள்ளுமாறு கட்டளை பிறப்பிக்கும். செல்கள் அந்த சர்க்கரையை சேமித்து, ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைத்து ரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க இன்சுலின் உதவும்.

இப்போது நாம் அதிக மாவுச்சத்து நிரம்பிய உணவை உட்கொள்கிறோம் என்றால் சர்க்கரை அளவு எக்கச்சக்கமாய் அதிகரிக்கும்; விளைவாக கணையம் நிறைய இன்சுலினை சுரக்க ஆயத்தப்படும். இதே போன்று பல்வேறு வாரங்களாக, மாதங்களாக, கணையம் நிற்காமல் மிகஅதிக அளவில் இன்சுலினை சுரக்கும். ஒருகட்டத்தில், நானும் 'எவ்ளோ அடிதான் தாங்குவேன்' என உடலில் உள்ள செல்கள் 'என்னால் இதற்கு மேல் சர்க்கரையை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் நிரம்பிவிட்டேன்' என கைவிரித்துவிடும். எவ்வளவு இன்சுலின் சுரந்தாலும் செல்கள் அவற்றை ஏற்காத காரணத்தால் ரத்தத்தில் சர்க்கரை ஏறிக்கொண்டே போகும். இது தான் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை. அதாவது உடலில் அதிகமாக இன்சுலின் சுரக்கும். ஆனால், அவற்றின் கட்டளைக்கு செல்கள் அடிபணியாது.

ரத்தத்தில் அதிகமான சர்க்கரை கொழுப்பாக நமது உடலில் சதைக்கு கீழே சேமிக்கப்படும். தொப்பை போடும்; உடல்பருமன் உண்டாகும்; நீரிழிவு, ரத்தஅழுத்தம் ஏற்படும். இவ்வாறாக பல உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பை போன்று நமது தோலில் ஏற்படும் ஒரு மாற்றம் தான் இந்த 'Acanthosis Nigricans'.

எனவே, இப்படியாக உங்களுக்கு ஏற்பட்டால் நீங்கள் உங்களுக்கு இன்சுலின் எதிர்ப்புத்தன்மை ஆரம்பித்துவிட்டது என்பதை உணர வேண்டும்.

இதை நிவர்த்தி செய்ய கணையத்திற்கு சிறிது ஓய்வளித்து, இன்சுலினை அதிக அளவு தூண்டாமல் இருப்பதே சரி என்பதை உணர்தல் வேண்டும்.

எனவே,

1.மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்

2.எண்ணையில் பொறித்த உணவுகள், பேக்கரி உணவுகளில் உள்ள 'Refined Carbohydrates' வகையறாக்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

3.உடல் பருமன் கொண்டவர்களுக்கு இது பரவலாக இருக்கும். ஆகவே, மாவுச்சத்தை குறைத்து உண்டு தினசரி 30 நிமிடம் நடக்க வேண்டும். அதேபோன்று, உடலில் தேவையற்ற சர்க்கரை கொழுப்பாக மாறியுள்ளது அல்லவா?? அதை எரிக்க நாம் உண்ணாவிரத முறையையும் கடைபிடிக்கலாம். உண்ணாவிரதம் மூலம் உடலில் சேமிப்பு நிலையில் உள்ள கொழுப்பு நன்றாக எரியும்.

4.இப்படியானவர்களில் பலருக்கு ஆரம்ப கால நீரிழிவு (Pre-Diabetes) இருக்க வாய்ப்பு உண்டு. எனவே, மருத்துவரை ஆலோசித்து தகுந்த ஆலோசனை பெற வேண்டும்.

5.பெண்களுக்கு PCOD எனப்படும் சினைப்பை கட்டியின் ஒரு அறிகுறி இது. இதையும் உறுதிபடுத்திக்கொண்டு தகுந்த சிகிச்சை பெற வேண்டும்.

6.தற்போதைய சூழலில் உடல்பருமன் கொண்ட குழந்தைகள் பலருக்கு இது இருக்கும். பெற்றோர் இது வெயிலில் சுற்றுவதால் வந்தது, அழுக்கு என நினைக்க வேண்டாம். நீங்கள் கொடுக்கும் தின்பண்டங்கள், நொறுக்குத்தீனியில் உள்ள சர்க்கரையின் விளைவே இது. ஆகவே, குழந்தைகளுக்கு இது ஏற்பட்டால் எச்சரிக்கையாக பெற்றோர் செயல்பட வேண்டும்.

நீங்களாகவே எந்த ஆலோசையும் இன்றி க்ரீமை பூசிக்கொள்ள வேண்டாம். அது தவறு !!

நன்றி. ❣️

Dr.Aravindha Raj.