இந்திய ஹாக்கி அணியின் ஹாட்ரிக் தங்கப்பதக்க சாதனையின் ஹீரோ பல்பீர்சிங்!!!

அது ஒரு ‘பொற்’காலம், இந்திய ஹாக்கி அணிக்கு. இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியை கிரிக்கெட் விழுங்காத காலம். 1928ஆம் ஆண்டிலிருந்து 1956ஆம் ஆண்டுவரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் 6 முறை தங்கப்பதக்கம் வென்றது இந்திய ஆடவர் ஹாக்கி அணி.



இரண்டாம் உலகப்போர் முடிந்து, இந்தியா-பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட பிறகு நடந்த 1948 லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும் அதனைத் தொடர்ந்து 1952 ஹெல்சிங்கி, 1956  மெல்போர்ன் ஒலிம்பிக் போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை புரிந்தது இந்திய அணி. 1956ல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணிக்கு கேப்டனாக இருந்து தங்கப்பதக்கம் வாங்கித் தந்தவர் பல்பீர்சிங் (சீனியர்). அதற்கு முந்தைய இரு ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி சார்பில் சிறப்பாக விளையாடி பங்கேற்று தங்க மெடல் பெற்றவர். ஹெல்சிங்கி ஒலிம்பிக்ஸில் இறுதிஆட்டத்தில் நெதர்லாந்தை 6-1 என்ற கோல்கணக்கில் இந்தியா  வெல்ல, அதில் 5 கோல்களை அடித்தார் பல்பீர் சிங். 1956ல் பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் வென்றது பல்பீர் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி.

 ஹாக்கியில் ஏற்பட்ட புதிய தொழில்நுட்பங்கள், ஐரோப்பிய விளையாட்டுக் களங்களில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியின் செல்வாக்கு 1960களிலிருந்து குறையத் தொடங்கியது. பாகிஸ்தான் தனது அதிரடி ஆட்டத்தால் தங்கப்பதக்கம் வெல்ல ஆரம்பித்தது. நெதர்லாந்து, ஆஸ்திரியா, ஜெர்மன் போன்ற அணிகள் புதிய உத்திகளைக் கையாண்டு வெற்றி பெற ஆரம்பித்தன. இந்தியாவின் பதக்கக் கனவு கானல் நீராகத் தொடங்கியது.

1980ல் சோவியத் யூனியனின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் அமெரிக்காவும் அதற்கு ஆதரவான மேற்கத்திய நாடுகள் பலவும் பாகிஸ்தானும் பங்கேற்காத நிலையில், இந்திய ஹாக்கி அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி வெற்றிபெற்றதே, கடைசி ஒலிம்பிக் தங்கமாக உள்ளது. ஆறுதல தந்த அந்த அணிக்குத் தலைமை தாங்கியவர் தமிழகத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பது நமக்கு பெருமை.

1948, 1952, 1956 ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணியின் ஹாட்ரிக் தங்கப்பதக்க சாதனையின் ஹீரோ பல்பீர்சிங் சீனியர் தனது 96வது வயதில் நேற்று மரணமடைந்துவிட்டார். இந்திய ஹாக்கி அணி நெடுங்காலமாக மரணப்படுக்கையில் தள்ளப்பட்டிருக்கிறது.

நன்றி அண்ணன் கோவி லாலின்