படித்ததில் பிடித்தது!

நன்றி அஷோக்குமார்

5 மணிக்கு அலாரம் வைத்து,
5.30 க்குள் காபி கொடுத்து,
6.30 க்குள் breakfast செய்து, அவருக்கு தனியாக lunch செய்து, இடையே குழந்தைகளை குளிப்பாட்டி,
7.30 க்குள் உணவு ஊட்டி
8 மணிக்குள் பஸ்ஸில் ஏற்றி,

ஆறஅமர எழுந்த கணவன் ஆபீஸ் போக ரெடியாக அவருக்கும் lunch box ready செய்து, அரக்க பறக்க அனுப்புவதற்குள்
ஐந்தாறு முறை திட்டுவாங்கி, போகும் போது உதிர்த்திடாத புன்னகைக்கும் ஒருமுறை மனம்வருந்தி, நேற்றைய இரவின் மிஞ்சிய உணவை சூடுபடுத்தி கொஞ்சம் தின்று, சமைத்து போட்ட பாத்திரங்கள் கழுவி, ஊறவைத்த துணிகளை துவைத்து, வீடு மொத்தம் பெருக்குவதற்குள் நான்கு சீரியல் முடிந்திருக்கும் ஒருத்திக்கு எதற்கு சமைக்கனும் என்று காலை சமைத்ததை காலிசெய்து கொஞ்ச நேரம் படுக்கபோனால் கோபத்தோடு கணவனின் போன்,

சமைத்த உணவில் குற்றம்கண்டு சகட்டுமேனிக்கு திட்டுகள் வாங்கி, வெறுப்பாய் எழுந்து வெளியே சென்று காய்ந்த துணிகளை கொண்டுவந்து கவனமாக ஐரன் செய்து அடுக்கிவைத்து திரும்புவதற்குள் அனுப்பிய குழந்தைகள் திரும்பிவிடும், குடிக்க கொஞ்சம் கொடுத்துவிட்டு, காக்காய் குளியல் குளித்துவிட்டு வராத பாடத்தை வரவழைக்க வாய்வலிக்க சொல்லித்தந்து, இடையில் இட்லிக்கு ஊறப்போட்டு, தாலிகட்டியவர் வருவதற்குள் தயாராய் dinner இருக்கவேண்டும், ஆபிஸில் வாங்கிய திட்டுக்களை எல்லாம் அப்பாவி என்மேல் கொட்டிவிட்டு, tv முன்னால் அமர்ந்துகொண்டு செய்திச்சேனலே கதியென்பார், வேண்டிய உணவை செய்துகொடுத்து பிள்ளைகளுக்கும் ஊட்டிவிட்டு தூங்க வைத்து பாத்திரம் கழுவி,

கதவை சாத்தி
கைகால் அலம்பி படுக்கச்சென்றால
பக்கத்து வீட்டுக்கே கேட்குமளவுக்கு கொர்ர்ர் என்று கொரட்டை சத்தம்,
ஒரு நாள் என்றால் பரவாயில்லை,
ஒவ்வொரு நாளும் இதுதான்,

காலைமுதல் பட்ட கஷ்டங்கள் ஒற்றையணைப்பில் சருகாகும், அந்த ஒற்றையணைப்பை வேண்டி நிற்கும் ஒவ்வொரு நாளும் ரணமாகும்,
உறங்கமுடியா ஓரிரு நாளில் வலியச்சென்று விரல்பிடிப்பேன், விருட்டென்று விசிறியடிக்க
விசும்பியழுது உறங்கிப்போவேன்,

உடலின் தேவைகள் ஒருபுறம், உள்ளத்தின் தேவைகள் மறுபுறம், அவருக்கென்று வந்தால் மட்டும் அடிமைப்பாய் விரிக்கவேண்டும்,
அதுவும் கூட ஆடிக்கொருமுறை அமாவாசைக்கொருமுறை
நரகம் என்பது வானில் இல்லை, கட்டியதாலியை காரணம்காட்டி கால் இன்ச் காதலையும் காட்டமறந்து கற்பழிக்கப்படும் மனைவிகளை கேளுங்கள் நாளும் எம்வீட்டில் நடக்கிறது நள்ளிரவில் என்பார்கள்!
மலடி என்பதன் ஆண்பால் எழத மறுக்கப்பட்ட பெண்குலம் இது!

குழந்தைக்காகவோ குடும்பத்திற்காகவோ கொடுத்தழிக்கிறோம் ஜென்மத்தை, மனதை அழுத்தி, மனநிலை பிறழ்ந்து மருத்துவனிடம் செல்கையில் மாத்திரை கொஞ்சம் கொடுத்தனுப்புவான், அவை வெறும் மாத்திரைகள் அல்ல மெல்ல அணைத்து
ஆறுதல் தந்து கணவன் தரவேண்டிய தூக்கத்தை
காதலின்றி காரணமின்றி
காலங்காலமாய் தந்தருளும் கடவுளுக்கு நிகரான இரண்டாவது கணவன்!

இரண்டாவது கணவன் இல்லையென்றால் முக்கால்வாசி முதல்கணவன்கள் முறுக்கிக்கொண்டு திரியமுடியாது மார்பைத்தொடாத மானங்கெட்ட மீசையை..!

----அஷோக்குமார்