என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ?

கோடி கோடியாக வேலை வாய்ப்பு...
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ?
''எல்லா வளங்களும் மிக்க நம் இந்தியத் திருநாட்டில் தோண்டினால் தங்கம் கிடைக்கும்; வெட்டினால் வெள்ளி கிடைக்கும்; இடித்தால் இரும்பு கிடைக்கும்; அடித்தால்கூட அலுமினியம் கிடைக்கும். ஆனால், படித்தால் மட்டும் வேலை கிடைக்காது!''
- பல்வேறு மேடைகளில் முழங்கப்படும் இந்த வரிகள்தான், இன்று பல கோடி இந்திய மாணவர்களின் வாழ்க்கையாக இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு காவல்துறைக்கு இரண்டாம் நிலைப் பணியாளர்களுக்கான தேர்வு நடந்தது. மொத்தம் 4,500 காலி இடங்கள். ஆனால், முண்டியடித்துப் பங்கேற்றவர்கள் எத்தனை பேர் தெரியுமா... 1 லட்சத்து 77 ஆயிரம் பேர்! '10-ம் வகுப்புதான் அதிகபட்ச தகுதி' என்று குறிப்பிடப்பட்டிருந்தும் இந்தத் தேர்வில் மோதிய முதுகலை பட்டதாரிகளின் எண்ணிக்கை பல ஆயிரங்கள் இருக்கும்!
எந்த வேலைக்கு அறிவிப்பு வந்தாலும் இந்த நிலைதான் இங்கே நீடிக்கிறது. 'கல்வி என்பது அறிவுக்காக' என்பதை மறந்து, 'கல்வி என்பது வேலைக்காக!' என சமுதாயம் என்றைக்கு தனக்குத்தானே கற்பித்துக் கொண்டு, அதற்காகவே மாணவர்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்ததோ... அன்றிலிருந்து நாட்டின் நிலைமை இப்படித்தான் மாறிக் கிடக்கிறது!
 
தற்போது நம் நாட்டில் உள்ள பட்டதாரிகளில் 72% பேர், 'ஆர்ட்ஸ்' எனப்படும் கலைத்துறை பட்டம் பெற்ற மாணவர்கள்தான்! புதிதாக வந்து கொண்டிருப்பவர்களிலும் இதே நிலைதான். இவர்களில் பெரும்பான்மையினருக்கு அரசு வேலைதான் ஒரே இலக்கு. மிச்சம் உள்ள பிற துறை மாணவர்கள் இந்த நெருக்கடி கால கட்டத்தில், பல லட்சங்களைக் கொட்டிப் படித்துவிட்டு, 'சில ஆயிரம் சம்பளத்துக்காவது வேலை கிடைக்குமா' என அலைகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களின் பார்வையும் அரசு வேலை மீதுதான் விழுகிறது.
தற்போது பெரும் அடிபட்டு முனகிக் கொண்டிருக்கிறது கணிப்பொறித்துறை. ஆனால், 'நாளை நல்லது நடக்கலாம்' என்ற நம்பிக்கையில் இப்போதும்கூட அங்கேதான் போய் மொய்க்கிறார்கள் பெரும்பாலானவர்கள். இத்தனைக்கும் வேலை வாய்ப்பு தரும் எத்தனையோ துறைகள் இருக்கின்றன. அதையெல்லாம் கொஞ்சம்கூட அவர்கள் திரும்பிப் பார்ப்பதில்லை. உதாரணத்துக்கு... பூச்சியியல், விவசாய அறிவியல் போன்ற படிப்புகளில் அரசு வேலைகள் நிறைய காலியாக இருக்கின்றன. இதெல்லாம் ஏனோ அவர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. 'விழுந்து விழுந்து படிப்பதும்... உட்கார்ந்து உட்கார்ந்து வேலை பார்ப்பதும்தான் வாழ்க்கை' என்பதே எல்லோர் மனதிலும் பதிக்கப்பட்டு விட்டதுதான் காரணம்.
குழந்தைகள், பெரியவர்கள் என்று கழித்துவிட்டால்... இந்தியாவில் 'வேலை செய்யும் திறனோடு' இருப்பவர்கள் மொத்தம் 45 கோடி பேர். இவர்களில் 4 கோடியே 70 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தை நம்பிப் பதிவு செய்து, புதுப்பித்துக் கொண்டு வருபவர்கள். இவர்களுள் அதிகபட்சமாக, சுமார் 5% பேருக்குத்தான் வேலை சரியான நேரத்தில் கிடைக்கும் என்பதுதான் இன்றைய தேதியில் அக்மார்க் உண்மை.
சரி... நம் நாட்டில் அரசு வேலையைத் தவிர, வேறு வேலை வாய்ப்பே இல்லையா?
இந்தியாவின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், ஒட்டுமொத்த உலக உற்பத்தியில் (ஜி.டி.பி.) இந்தியாவின் பங்கு 27% என்று இருந்திருக்கிறது ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட காலத்தில். இன்றோ... வெறும் 3% என்ற நிலைக்குக் குறைந்துபோயிருக்கிறது. காரணம்... வரலாறு கற்றுக் கொடுத்ததை நாமெல்லாம் மறந்துபோனதுதான். நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்காமல், பயன்படுத்தாமல் அழித்து வருகின்றோம். இயற்கை வளங்களே நிலையான வேலை வாய்ப்பின் ஆதாரங்கள். அவற்றில்தான் அழிக்க முடியாத வேலை வாய்ப்புகள் காலாகாலத்துக்கும் ஊறிக்கொண்டே இருக்கும்.
இந்தியாவிலே 20 கோடி ஏக்கர் நிலம் விவசாயம் செய்யப்படாமல் தரிசாக உள்ளது. ஒரு ஏக்கர் நிலம் இரண்டு பேருக்கு வேலை தரும். இதனால் 40 கோடி பேர் வேலை பெறலாம். பசு, எருமை மாடுகள் 36 கோடி உள்ளன. 2 மாடுகள் 5 பேருக்கு வேலை தரும். இதனால் 90 கோடி பேர் வேலை பெறலாம். நாட்டின் வனவளம் 75,000 சதுர கிலோ மீட்டர் உள்ளது. ஒரு ச.கி.மீ. வனத்தில் 200 பேர் வேலை செய்யலாம். இதன் மூலம் ஒன்றரை கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். நிலத்தைவிட கடலில் 20 மடங்குகள் வளம் அதிகம். ஒரு கி.மீ. கடலில் 4,000 பேர் வேலை செய்ய முடியும். இதன் வாயிலாக 3 கோடியே 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்! இவை தவிர, ஆடுகள், கோழிகள் என்று ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன. எல்லாமே நிலையான வேலைவாய்ப்பை அளிக்கக் கூடியவை. அதாவது, மறுபடி மறுபடி உற்பத்தி ஆகிக்கொண்டே இருக்கக் கூடியவை. இயற்கை வளத்தை எந்த வகையிலும் பாதிக்காத வேலை வாய்ப்புகள்!
இதையெல்லாம் கணக்குப்போட்டால்... இன்னும் நூறு கோடி பேருக்குக்கூட இங்கே வேலை கொடுக்க முடியும்! ஆனால், மக்களும் சமூகமும்தான் அதற்குத் தயார் செய்து கொள்வதில்லை. இதுதான் வேலையில்லா திண்டாட்டத்துக்கு முழுமுதற் காரணம்.
''நியாயமான முறையில் பிழைப்புத் தரும் தொழில்களை இழிவாகக் கருதும் மக்கள் சமூகம், தாழ்ந்து போகும் என்பதில் சந்தேகம் இல்லை' என்று அன்றைக்கே காந்தியடிகள் சொல்லிச் சென்றதை கொஞ்சம் கொஞ்சமாக நாம் நிரூபித்துக் கொண்டு வருகிறோம்! உண்மையை என்றைக்கு உணரப்போகிறோமோ?!