மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை !

உன்னிடம் என்ன கேட்டேன்
மலரெனும் காதல் கேட்டேன்
உன்னிடம் என்ன கேட்டேன்
அன்பெனும் முத்தம் கேட்டேன்
உன்னிடம் என்ன கேட்டேன்
உன்னிலிருக்கும் என்னைக் கேட்டேன்
உன்னிடம் என்ன கேட்டேன்
உன்னுடன் தனிமை கேட்டேன்

தந்தாயா ... தந்தாயா ... தங்கமே ..?

காதல் கொண்டாய் !
முத்தம் தந்தாய்
முடிவின்றி மொத்தமாய்
பெற்றுக் கொண்டாய் !
என்னைக் கேட்ட உன்னிடம்
உன்னையே தந்தாய் !
தனிமை கேட்ட என்னிடம்
மஞ்சள் நாண் தந்தாய்
மங்களம் கண்டாய்
இருவர் கூடி - முடிவில் ...
ஈரிரு நால்வர்  தந்தாய் ..!

கண்ணே !
மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
நல்லதோர் குடும்பம் கண்டு
சொர்க்கம் தந்தாய் தங்கமே !

#பருத்திஇக்பால்.

என்ன ஆயிற்று, எப்படியாவது மேலே வாடா !!

சிறுவனும் அன்னையும் வழக்கமாகச் செல்லும் பாதை தானாம். பார்வைக் குறைபாடு கொண்டவர் எனினும் இடது ஓரமாகவே தன் மகனை எப்போதும் அழைத்துச் செல்பவராம். அன்று அன்னைக்கும் மகனுக்குமான சுவரசியப் பேச்சினூடே, மகன் எதையோ காண்கிறான், தன் கையுயர்த்தி அதை அன்னைக்கும் காட்ட விழைகிறான், பாதை விலகி விடுகிறான், கணப்பொழுதில் அது நிகழ்ந்து விடுகிறது. 


இரும்புத் தண்டவாளத்தின் மீது விழுந்தாலும், எத்தனை வேகமாக எழுகிறான் பாருங்கள். பயமில்லை! திணறவில்லை! காரணம், பார்வையற்ற அன்னைக்கு நாம் தானே கண்கள் என்பதை அவன் நன்றாகவே அறிவான், ஆனால் அவனது உயரத்தை விட சற்று உயரமாக மேடை அமைந்து போனது தான் துயரம். அதே நொடி தான் பாதை விலகி விட்டோம் என்று தரையைத் தடவி உணர்ந்து கொள்கிறாள் அன்னை. தவறு, பெருந்தவறு செய்துவிட்டேன், எங்கிருக்கிறோம், என்ன ஆயிற்று, எப்படியாவது மேலே வாடா !! எனப் பதறியிருக்க வேண்டும், ரயில் சத்தம் வேறு மிரட்டியிருக்கும், மகன் ஒரு புறம் கதற, பார்வையற்ற அன்னை ஒரு புறம் பதற, புயலென ஓடி வருகிறான் மீட்பன். 

சரளைக் கற்களின் மீது சாதாரணமாக ஓடுவதே அசாத்தியம், அதிலும் எமனென எதிரில் வரும் ரயிலை எதிர்த்து ஓடுவதெல்லாம் இறை சக்திக்கு அப்பாற்பட்ட அதி சக்தி. உதவும் குணம் கொண்ட மனிதருக்கே அது வாய்க்கப்பட்டது. அத்தனை வேகமாக ஓடி வரும்போது 'உன்னால் முடியுமா' என அவரைக் குறுவினாடி தயங்கி யோசிக்க வைத்தது அனிச்சை குணம் கொண்ட மூளை.. ஓடு நண்பா ! உன் உயிரை விட குழந்தை முக்கியம் என தொடர்ந்து ஓட வைத்தது அன்பு குணம் கொண்ட இதயம். 

நண்பருக்கு இக்காணொளியை அனுப்பினேன் ! எல்லாம் வல்ல இறைவன் அவரை எப்படி ஓட வைத்தார் பாருங்கள் என்றார்.

இல்லை சார் ! ஓடியதே இறைவன் தான், பெயர் மயூர் ஷெல்க்கே ! என்றேன்.
//shared