பிறந்த நாள் கொண்டாட்டம்,
திருமணக் கொண்டாட்டம்,
புத்தாண்டுக் கொண்டாட்டம்,
காதலர் தினக் கொண்டாட்டம்,
நண்பர்கள் தினக் கொண்டாட்டம்
முதலான கொண்டாட்டங்கள்
ஊடகங்கள்
பெற்றுப்போட்டவை.
தமிழன் கொண்டாடிய
தைத்திருநாள் கொண்டாட்டம்
ஏழைகளை மகிழச் செய்தது;
விவசாயிகளைச் சிரிக்கச் செய்தது.
இன்றைய இளைஞர்கள்
கொண்டாடுகிற
திருமணக் கொண்டாட்டத்தால்
யாருக்கு என்ன பயன்?
கேக்கை வெட்டி
மாப்பிள்ளை முகத்தில்
அப்புவதா மகிழ்ச்சி?
கேக்கை முகத்தில்
வீசியெறிவதா மகிழ்ச்சி?
வண்ண வண்ண
அலங்காரத் துகள்களை
அள்ளியெறிவதா மகிழ்ச்சி?
இதனால் யாருக்கு
என்ன பயன்?
ஆண்டின் முடிவில்
ஆபத்தோடு விளையாடும்
இளைஞர்களின்
புத்தாண்டுக் கொண்டாட்டம்.
இது ஒரு
கண்மூடித்தனமான கொண்டாட்டம்.
மதுவைப் பருகிவிட்டு
கண்மண் தெரியா வேகத்தில்
வாகனத்தில் சீறிப் பாய்வது
என்ன வகை கொண்டாட்டம்?
அப்பாவி மக்களை
அச்சுறுத்துவதும்
ஆபத்தை விளைவிப்பதும்
என்ன வகை கொண்டாட்டம்?
கொண்டாட்டம் என்பதென்ன?
நாம் மகிழ்வதும்
நம்மால் பிறர் மகிழ்வதுமே.
சீர்கெட்ட வேகத்தில்
சீறிப்பாய்வதால்
யார் மகிழ்ந்தார்? - முரணாக
உன்னைப் பெற்றெடுத்தோர்
உன்னை இழந்தார்.
சாலையில் செல்வோரை
சந்தூக்கில் ஏற்றுவதா
உன் கொண்டாட்டம்?
பாதையில் செல்வோரைப்
பாடையில் ஏற்றுவதா
உன் கொண்டாட்டம்?
கடந்துவிட்ட நாள்களைக்
காசு கொடுத்து வாங்க முடியாது.
எதிர்காலத்தையேனும்
எப்படிப் பயன்படுத்துவதெனத்
திட்டமிடு; தீர்மானம் கொள்.
காலத்தைக் கட்டிப்போட்டுப்
பயன்படுத்தினால்
காலம் உன்னை மதிக்கும்.
இல்லையேல்
காலம் உன்னை மிதிக்கும்
நினைவில் கொள்.
-நூ. அப்துல் ஹாதி பாகவி
சென்னை
19.12.2020 03 05 1442
பதிவர்
நூ அப்துல் ஹாதி பாகவி
===================