ஜன் லோக்பால் மசோதா என்றால் என்ன

இன்று ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டம், ஜன் லோக்பால் மசோதாவை வலியுறுத்திதான் என்பது தெரிந்த ஒன்றுதான் என்றாலும், ஜன் லோக்பால் மசோதா என்றால் என்ன என்பதை அறிந்துகொண்டால், அதற்கான முக்கியத்துவத்தையும் தெரிந்துகொள்ளலாம்.
ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும், அது பிரதமர், நீதிபதிகள் உள்ளிட்ட உயர்பதவி வகிப்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் விசாரிக்க வகை செய்யும், தேர்தல் ஆணையம் போன்ற ஒரு தன்னிச்சையான அமைப்பை ஏற்படுத்துவதற்கு அடித்தளமிடுவதுதான் ஜன் லோக்பால்.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும்,எடியூரப்பாவை கதறடித்த கர்நாடக லோக்ஆயுக்தா நீதிபதியுமான சந்தோஷ் ஹெக்டே, பிரபல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், தகவல அறியும் உரிமை சட்ட ஆர்வலரான அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரால் வரைவு செய்யப்பட்டதுதான் இந்த ஜன் லோக்பால் மசோதா.

இதன் மூலம் ஊழல் செய்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், புகார் கூறப்பட்ட இரண்டாண்டு காலத்திற்குள் அந்த நபரை சிறைக்கு அனுப்ப முடிவதோடு, ஊழல் செய்து சேர்த்த அந்த நபரது சொத்துக்களையும் பறிமுதல் செய்யமுடியும்.மேலும் அரசிட முன் அனுமதி பெறாமல் ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீதும் வழக்கு தொடர்வதற்கான அதிகாரம் ஜன் லோக்பாலுக்கு உள்ளது.

ஊழலுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள பல் இல்லாத லோக்பால் மசோதாவை தூக்கி எறிந்துவிட்டு,ஊழல் செய்யும் நீதிபதிகள் மற்றும் பிரதமர் ஆகியோரையும் விசாரிக்க வகை செய்யும் வலிமையான ஜன் லோக்பால் மசோதாவை கொண்டு வர வலியுறுத்தி உருவாகியுள்ள இந்த இயக்கத்தில் ஹசாரே, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி, சுவாமி அக்னிவேஷ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மல்லிகா சாராபாய் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.

"ஊழலுக்கு எதிரான இந்தியா" (India against corruption) என்ற இந்த இயக்கத்தின் இணையதளத்தில், இந்தியாவில் நிலவும் ஊழலுக்கு எதிரான மக்களின் கூட்டு கோபத்தின் வெளிப்பாடே இந்த இயக்கம் என கூறப்பட்டுள்ளது.
இந்த ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம்/வேண்டுகோள்/அழுத்தம் கொடுக்கவே நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் ஊழலை தடுத்து நிறுத்த ஒரு பயனுள்ள செயலாக இருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது. .
.
thanks to: http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1108/20/1110820026_1.htm